இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான பிரச்சனைகள்
பொதுவாக இந்திய பொருளாதார வளர்ச்சி பற்றிய கட்டுரைகள் இந்தத் துறையைப் பற்றிய நல்முகத்தைப் பற்றி பேசுகின்றன. இல்லையேல், கட்டமைப்பு வளர்ச்சிப முன்னேற்றத்தில் உள்ள தடைகளைப் பற்றி அலசுகின்றன. ஆனால், இந்திய தேர்தல் காலப் பிரச்னைகள் ஏனோ நல்முகம் மற்றும் இப்பண்டிதர்கள் சொல்லும் கட்டமைப்பு வளர்ச்சி முட்டுக்கட்டைகள் பற்றி அதிகம் கவலைப் படுவதாகத் தெரிவதில்லை. எப்படி தேர்தலுக்கு ஒரு அணுகுமுறை, மற்ற சமயங்களில் இன்னொரு அணுகுமுறை சாத்தியம்? அலசப்படுவதோ ஒரே அம்சம் – இந்தியப் பொருளாதாரம். என் பார்வையில் ஓரளவிற்கு தேர்தல் நேர அணுகுமுறையில் உண்மை இருந்தாலும், பண்டித்துவ அணுகுமுறையில் முழுப் பூசணிக்காயும் மறைக்கப் படுவது போலப் படுகிறது. உண்மையான நிலை இந்த இரு அணுகுமுறைகளுக்கும் இடையே உள்ளது என்பது என் கருத்து.
பண்டிதர்களின் பார்வையில் இந்திய வளர்ச்சியின் நல்முகம் என்ன? 1) உலகிலேயே வேலை செய்யும் வயதில் அதிகம் இளைஞர்கள் உடைய நாடு 2) ஏராளமான பொறியாளர்கள் உள்ள நாடு 3) கணினி மென்பொருள் மற்றும் பின்னலுவல் வேலைகளுக்காக உலகிலேயே அதிகம் விரும்பப்படும் நாடு. இதன் பின்னணியைச் சற்று கவனியுங்கள். மேலை நாடுகள் இந்த மூன்று விஷயங்களிலும் பயன் பெரும் வாய்ப்புள்ளது. இவர்கள் சொல்லும் குறைகள் பெரும்பாலும் இரு விஷயங்கள்: 1) கட்டமைப்பு முன்னேற்ற முட்டுக்கட்டைகள் 2) சந்தை மற்றும் முதலீடு விஷயங்களில் உள்ள முட்டுக்கட்டைகள். குறைகள் நீக்கப்பட்டால் யார் பயனடைவார்கள் – மேலை நாட்டு நிறுவனங்கள். ஆக, பண்டிதர்கள் சொல்லும் பொருளாதாரப் பார்வை மேல்நாட்டு நிறுவனங்களின் சுயநலப் பார்வை என்பது என் கருத்து.
தேர்தல் கால பொருளாதாரப் பிரச்சனையாக எதைச் சொல்லுகிறார்கள்? 1) மின்சாரப் பற்றாக்குறை 2) அரசியல் ஊழல் 3) விலைவாசி உயர்வு. சமீப காலமாக வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாகப் பேசப்படுவதில்லை. ஆளும் கட்சிகள் தங்கள் பொருளாதாரச் சாதனைகளாக எதைச் சொல்லுகின்றன? 1) எளிய ஏழை மக்களுக்கு வழங்கிய மானியம் 2) அரசு உதவியில் (subsidy) வழங்கப்பட்ட உணவு.
சற்று குழப்பமாக உள்ளதல்லவா? 2ஆம் பத்திக்கும் 3 ஆம் பத்திக்கும் ஏணி வைத்தால் கூட எட்டாது போலிருக்கிறதே. நாம் விவாதிப்பது இந்திய பொருளாதாரம் தானா என்று சந்தேகம் கூட வர வாய்ப்புள்ளது. தேர்தல் முடிந்தவுடன், பத்திரிக்கைகள் இரண்டாம் பத்தி அணுகுமுறைக்குத் தாவி விடுகின்றன – அடுத்த வல்லரசு இந்தியாவா அல்லது சைனாவா?
ஆரம்பத்தில் சொன்னது போல உண்மை இரண்டு அணிகளின் வாதங்களில் எங்கோ அடிபட்டுக் காணாமல் போய்விடுகிறது. சற்று தேர்தல் காலப் பொருளாதார பிரச்சனைகளின் பின்னணியில் உள்ள உண்மையான பிரச்சனைகளை ஆராய்வோம். 1) கட்டுப்பாடற்ற ஜனத் தொகை வளர்ச்சி 2) கண்மூடித்தனமான மேற்கத்திய பொருளாதார அணுகுமுறை. என் பார்வையில், இவை உண்மையான பிரச்சனைகள். இதைப் பற்றி பேச யாருக்கும் துணிவில்லை. மூடி மறைத்து, சுற்றி வளைத்து இரு அணியினரும் மைக்கில்/ஊடகங்களில் குழப்புகிறார்கள்.
கட்டுப்பாடற்ற ஜனத் தொகை வளர்ச்சி
இந்தியாவில் இருக்கும் ஜனத்தொகைக்கு அது ஒரு சிறிய நாடு. 50 கோடி ஜனத்தொகை என்பது இந்தியாவின் நிலப்பரப்புக்கு சமாளிக்கக் கூடிய ஒன்று. இந்தியாவைவிட 3 மடங்கு அதிக நிலப்பரப்பு கொண்ட அமெரிக்காவில் 30 கோடி மக்கள் வசிக்கிறார்கள். 120 கோடி மக்கள் வாழும் இந்தியா மிக அதிக நில வள சவால்களை கடந்த 60 ஆண்டுகளாக சமாளிக்க முடியாமல் தடுமாறி வந்துள்ளது. நாட்டின் வளம், கட்டுப்பாடற்று வளருகின்ற மக்கள் தொகையால் குறைந்த அளவிலேயே தலா ஒவ்வொருவருக்கும் போய்ச் சேறுகிறது. பொருளாதார வளர்ச்சி மக்கள் தொகை வளர்ச்சி அளவு இல்லாததால் இது மேலும் மேலும் குறைந்த வண்ணம் இருக்கிறது. இதனால், நிலையான நில வளங்கள் (இது விவசாயம், தொழில் இரண்டிற்கும் மிகவும் முக்கியமானது) ஒவ்வொரு வருடமும் மேலும் அதிக மக்களிடையே பங்கிடப்படுகிறது; மேலும், இன்னும் புதிதாக சேர்ந்த மக்கள் தொகையை ஆதரிக்க நில வளங்கள் பொருளாதாரமல்லாத மற்ற தேவையான சேவைகளுக்கு திசைதிருப்பி விடப்படுகிறது (வீட்டு மனை, சாலைகள்).
இந்திய பொருளாதாரத்தின் நல்முகமாக சொல்லப்படும் விஷயம் உலகிலேயே வேலை செய்யும் வயதில் அதிகம் இளைஞர்கள் உடைய நாடு. புள்ளிவிவரத்தில் மேல்வாரியாகப் பார்த்தால் ஒரு காட்சி தெரியும், ஆழமாகப் பார்த்தால் இன்னொன்று தெரியும். சராசரி இந்திய வயது 26 – உலகிலேயே இது எந்த நாட்டுக்கும் இப்போது வாய்க்கவில்லை என்பது புள்ளிவிவரம். சற்று ஆழமாகப் பார்த்தால், இது வெறும் ஒரு ஜனத்தொகை சராசரி விவரம். படித்த, பயிற்சி பெற்ற இளைஞர் கூட்டமா இது? இல்லை. இதில் பெரும் பகுதி உ.பி. பீகார், உத்தராஞ்சல், ஒரிஸா, சத்தீஸ்கர் போன்ற பின்தங்கிய மாநில படிக்காத இளைஞர்கள். அதிகம் படிப்பு மற்றும் பயிற்சி பெற்ற தென்மாநிலங்களில் சராசரி வயது 30-ஐத் தாண்டிவிட்டது. ஆக, இதில் உள்ள உண்மையான சவால் என்னவென்றால், இந்த ஏராளமான இளைஞர் சமுதாயத்திற்கு கல்வி வழங்கும் கட்டமைப்பு நம்மிடம் இல்லை. கல்வியோ, பயிற்சியோ இல்லாத இளைஞர்களுக்கு எப்படிப்பட்ட வேலைகள் உள்ளன? மேல்நாட்டோருக்கு தேவையான கணினி மென்பொருள், பின்னலுவல் வேலைகளா? அல்லது தொழிற்சாலை வேலைகளா? வெறும் விவசாயத் தொழிலில்தான் இப்படிப்பட்ட மனித சக்தியை பயன்படுத்த முடியும். விவசாய முதலீடுகள் ஆண்டாண்டுக்கு இந்தியாவில் குறைந்த வண்ணம் இருக்கிறது.
அரசாங்கத்தின் அடிப்படைப் பணிகள், குடிமக்களுக்கு கல்வி, மருத்துவம், வேலை வாய்ப்பு, எல்லைப் பாதுகாப்பு அளிப்பது. கட்டுக்கடங்காத மக்கட்தொகை வளர்ச்சியால், அடிப்படைத் தேவைகளை வழங்கவே அரசாங்கங்கள் தவிக்கின்றன. மானியம் வழங்கி, உதவித்தொகை வழங்கி எப்படியோ சமாளித்துவிடப் பார்க்கின்றன அரசாங்கங்கள். இது குறுகிய நோக்கு அணுகுமுறை. அடிப்படைப் பிரச்சனையான மக்கட்தொகை கட்டுப்பாட்டை கவனிக்காமல் பூச்சு வேலை செய்யும் வரை உண்மையான முன்னேற்றம் என்பது கனவாகவே இருக்கும். குடிநீர், உணவு மற்றும் முக்கிய தேவைகளை ரொம்ப நாட்களுக்கு இப்படிச் சமாளிக்க முடியாது.
கண்மூடித்தனமான மேற்கத்திய பொருளாதார அணுகுமுறை
சமீபத்திய ஆண்டுகளில் இந்தியர்கள் மேற்கத்திய முறையில் முன்னேறத் துடிக்கிறார்கள். அமெரிக்க எழுத்தாளர் டாம் ஃப்ரீட்மேன், 2008 ல் வெளிவந்த, அவருடைய புத்தகமான ‘Hot Flat and Crowded’ –ல் இதை அழகாக ‘Too many Americans’ என்கிறார். வளர்ச்சியின் அடையாளம் என்ன? ரொட்டி வாட்டும் மின்கலம் (bread toaster), மைக்ரோவேவ் அடுப்பு, ராட்சச குளிர்சாதனப் பெட்டி, பல விதமான மின்னணு உபரணங்கள் (electronic gadgets), மற்றும் கார் அல்லது மோட்டார் பைக். இவற்றை எல்லாம் பெற்றுவிட்டால், ஒரு பொறுப்பற்ற புதிய அமெரிக்கர் உருவாக்கப் படுகிறார் என்று நகைச்சுவையாக ஃப்ரீட்மேன் சொல்லுகிறார். பொதுவாக உபகரணங்கள் மேற்கத்திய கலாச்சாரத்தில், மின்சாரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் உறிஞ்சித் தள்ளும் மனப்போக்கு இருந்த காலத்தில் உருவாக்கப்பட்டவை. இதில் என்ன பெரிய விஷயம்? மேற்கில் உள்ளவர்கள் அனுபவிக்கவில்லையா? ஏன் இதில் இந்தியர்கள் மட்டும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று உபதேசிக்கப்படுகிறார்கள்? சற்று மேற்குலகு என்றால் என்னவென்று பார்ப்போம். ஐரோப்பா, மற்றும் வட அமெரிக்காவில் மேற்குலகினர் வசிக்கிறார்கள். இதில் ராட்சச கனடா, அமெரிக்கா மற்றும் ஏறத்தாழ 30 ஐரோப்பிய நாடுகளில் வசிக்கும் 100 கோடி பேர்கள் அடக்கம். இவர்கள் வாழும் நிலப்பரப்பு, ஏறக்குறைய இந்தியாவைவிட 8 முதல் 10 மடங்கு அதிகம். (இந்த கணக்கில் நான் உலகின் மிகப் பெரிய நாடான ரஷ்யாவை சேர்க்கவில்லை). இந்தியாவை விட 100 மடங்கு அதிக நில/நீர் வளம் உள்ள நாடுகள் இவை. இத்தனை வளமுடைய நாடுகளின் அலட்சிய போக்கில் உருவாக்கிய உபகரணங்களை குறைந்த வளமுடைய இந்தியாவில் கட்டுப்பாடின்றி உபயோகிக்கப் பட்டால், சுமை தாங்காமல் நம்முடைய கட்டமைப்பு நொறுங்கிவிட வாய்ப்புள்ளது.
ஃப்ரீட்மேன் கணக்குப்படி, இப்பொழுது 100 கோடி “அமெரிக்கர்கள்” (வளங்களை உறிஞ்சுபவர்கள்) பூமியில் வாழுகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இக்கணக்கில் இந்தியா, சைனா, ஜப்பான், ரஷ்யா, பிரேஸில் போன்ற அதிவேக முன்னேறும் நாடுகள் அடக்கம். இதுவே 200 கோடி அமெரிக்கர்களாக வளர்ந்தால், அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இந்த பூமியில் வளங்கள் இருக்குமா என்பது சந்தேகம்தான். இந்தியாவிடம் அதிக எண்ணெய் வளமில்லை. கண்ட கண்ட சர்வாதிகாரிகள், ஷேக்குகள் கையை, காலைப் பிடித்து எவர் கொடுத்தாலும் எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதி செய்து எப்படியோ சமாளித்து வருகிறது இந்தியா. சைனாவின் நிலையும் இதுதான். மின் உற்பத்திக்கு நிலக்கரியும் எரிவாயுவும் பெரும்பாலும் உபயோகப்படுத்தப் படுகிறது. இந்தியாவில் கடலோரப் பகுதிகளில் காற்று மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டாலும், இதன் பங்கு இந்திய மின்சார உறபத்தியில் 10 சதவீதத்தைவிடக் குறைவு. எவ்வளவு அதிக உற்பத்தி வளர்ந்தாலும் ஏன் இன்னும் பல விஷயங்களில் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கிறது? அடிப்படை தேவைகளான, நீர், உணவு, மின்சாரம், எரிபொருள் ஏன் இன்னும் பிரச்சனையாகவே உள்ளது?
இந்த நிலைக்கு முக்கியக் காரணம் நம் தேவைகள். மேற்கத்திய முறைகளில் நாம் நமது தேவைகளை வளர்த்துக் கொண்டுள்ளோம். அடுத்த தெருவில் இருக்கும் நண்பனைப் பார்க்க நடந்து/சைக்கிளில் சென்ற நிலை மாறி, அநாவசியமாக பைக் சவாரி செய்வதை பெருமையாகப் பேசுகிறது நம் சமூகம். பல விதமான மின்னணு சாதனங்கள் மின்னணு கழிவு (e-waste) பற்றி கவலைப்படாமல் எறிவதில் நமக்கு பெருமை வேறு. மிகச் பெரிய குடும்பங்கள் நகரங்களில் மிகச் சிறிய குடியிருப்புகளில் வாழ்ந்தாலும் ராட்சச டிவி மற்றும் குளிர்சாதனப் பெட்டிக்கு எப்படியோ இடம் கிடைத்து விடுகின்றது. ஓரளவு வசதி வந்தவுடன் பொது போக்குவரத்தை துறப்பதற்கு துடிக்கிறோம்.
மேற்குலகின் பல்வேறு பொருள்களும் (western brands) இந்தியாவில் ஷாப்பிங் வளாகங்களில் விற்றுத் தள்ளுகின்றன. இதில், ஊர்த்தி, உணவு, உடை, மற்றும் ஒப்பனைப் பொருள்கள் அடக்கம். நகரங்களில் உள்ள நடுத்தர மற்றும் உயர்தர மக்களுக்காகவே ஒரு புதிய உலகம் இறக்குமதியால் உருவாக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில், கல்வி, சுகாதாரம் போன்ற விஷயங்கள் சாதாரண மக்கள் எட்டிப் பிடிக்க முடியாத உயரத்திற்குப் போய்விட்டது. கண்மூடித்தனமான மேற்கத்திய பொருளாதார முறைகள் இந்தியாவில் உள்ளோருக்கும், இல்லோருக்கும் உள்ள இடைவெளியை மிகப் பெரிதாக்கிவிட்டது தெளிவாகத் தெரிகிறது. கணினி மென்பொருள் மற்றும் பின்னலுவல் தொழில்களில் பெரிதும் மேல்நாட்டு நிறுவனங்களே பயன் பெருகின்றன. இந்த நிறுவனங்களில் வேலை செய்து பெற்ற வருமானத்தை இளைய தலைமுறையினர் பெரும்பாலும் மேல் நாட்டு நிறுவனங்களுக்கே கொண்டு சேர்த்து விடுகிறார்கள் – வீடு மற்றும் நிலங்களைத் தவிர, இவர்களின், ஊர்த்தி, உணவு, உடை, மற்றும் ஒப்பனைப் பொருள்கள், மது யாவும் மேலை நாட்டு நிறுவனங்களுக்கே லாபமாய் போய்ச் சேறுகிறது.
தேர்தல் காலத்தில் இந்தப் பொருளாதார இடைவெளி ஊடகங்களில்/பிரசாரங்களில் பெரிதாகப் பேசப்படுகிறது. தேர்தல் முடிந்தவுடன், மறக்கப்படுகிறது. என் பார்வையில், இந்த இரண்டு பொருளாதார அடிப்படைப் பிரச்சனைகளை தீர்க்காத வரையில் நம் முன்னேற்றம் ஒரு சீரற்றதாகவே இருக்கும்.
தைரியமாக செய்ய வேண்டிய பணிகளில் சில இவை:
1. ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக் கொள்ளும் பெற்றோருக்கு அரசாங்க சலுகைகள் எதுவும் தரக் கூடாது. ரேஷன் கார்டு, சமையல் எரிவாயு முதல் மற்ற அத்தனை சலுகைகளும் நிறுத்தப்பட வேண்டும். இதில் சமூக உறவுப் பிரச்சனைகள் வர வாய்ப்புள்ளது. ஆனால், இந்தியாவின் நிலை தலைக்கு மேல் தண்ணீர் உள்ள நிலை.
2. பெட்ரோல் மீதுள்ள சார்ந்துள்ளமையை (oil dependence) குறைக்க வழிகள் தேட வேண்டும். மிக சூடான நாடான இந்தியாவில் பாலிஸ்டர் (பெட்ரோலியம் சார்ந்த பொருள்) ஏராளமாக விற்பதும் வேடிக்கைதான். நகரங்களில் சைக்கிள் பாதைகள் உருவாக்கப் பட வேண்டும். ஒன்றாக காரில் செல்வதை/பொது போக்குவரத்தை பெரிதும் ஊக்குவிக்க வேண்டும்
3. கட்டுப்பாடற்ற இறக்குமதியை குறைக்க வேண்டும். உள்நாட்டு தயாரிப்பாளர்களுக்கு வரிச் சலுகைகள் வழங்க வேண்டும்
4. மேல்நாட்டு நிறுவன்ங்கள் இந்தியக் கல்வி, சுகாதார கட்டமைப்பு பணிகளுக்கு நிதியளித்தால்தான் இந்தியாவில் வணிகம் சாத்தியம் என்ற நிலை வர வேண்டும். உலகில் 120 கோடி சந்தை என்பது இந்தியாவை விட்டால் சைனாவில்தான் உள்ளது. சில நிபந்தனைகள் இருந்தால், பன்னாட்டு நிறுவனங்கள் சொஞ்ச நாட்களுக்கு அநீதி என்று அலறுவார்கள். பிறகு, சந்தையின் மதிப்பைப் பார்த்து அடிபணிவார்கள்.
5. சூரிய ஒளியினால் இயங்கும் பலவகை ஊர்த்திகளுக்கு ஊக்கம் அளிக்க வேண்டும்
6. விவசாயத்திற்கு மீண்டும் ஊக்கம் அளிக்க வேண்டும்
7. கிராமப்புறத்தில் வேலைகள் பெருக வழி செய்ய வேண்டும். இந்திய நகரங்கள் மக்கள் வெள்ளத்தில் பிதுங்கி சிதைந்து கிடக்கின்றன. மேலும், கிராமத்திலிருந்து நகரங்களுக்கு மக்கள் குடி பெயர்ந்தால், நிலைமை மேலும் மோசமடையும்.
Thanks to thinnai.comCopyright:thinnai.com
No comments:
Post a Comment