pudukkottai mangadu

wellcome on my site raja,pudukkottai,mangadu

Thursday, July 21, 2011

காலில் விழும் கலாச்சாரத்தை கற்று தரும் ஆசிரியர்கள்



காலில் விழும் கலாச்சாரத்தை கற்று தரும் ஆசிரியர்கள்

- ராஜ்ப்ரியன்

      கடந்த ஒரு வாரமாக தினசரி செய்திதாள்களை புரட்டியபோது தினமும் குறைந்தது 3 புகைப்படங்களாவது கண்ணில் பட்டது. அந்த படத்தில் பள்ளி மாணவ-மாணவிகள் பூக்கள் நிரம்பிய தட்டுகளோடு எதிரும் புதிருமாக வரிசையில் நின்றுகொண்டு நடுவில் நடந்து வருபவர்களுக்கு மலர் தூவிக்கொண்டிருந்தனர்.

வேறு சில படங்களில் அதேபோல் வேறு பள்ளி 
மாணவ-மாணவிகள் சிலருக்கு பாதபூஜை செய்துக்கொண்டிருந்தார்கள். 

மலர் தூவி பாத பூஜை செய்யும் அளவுக்கு அந்த மிக முக்கியமானவர்கள் யார் என படத்தை உற்று உற்று பார்த்தபோதும் 
சம்பந்தப்பட்ட வி.ஐ.பிகள் யாரென்றே தெரியவில்லை. புகைப்படத்திற்கான செய்திகளை படித்தபோது தான் தெரிந்தது;அவர்கள்ஆசிரியர் பெருமக்களாம். 


      செப்டம்பர் 5ந்தேதி ஆசிரியர் தினம். ஆசிரியர்களை பெருமைப்படுத்த மாணவ-மாணவிகள் தங்களது அன்பை இவ்வாறு வெளிப்படுத்தினார்கள் எனச்செய்தி தெரிவித்தது ஆச்சர்யமாக இருந்தது.

நமக்கு தெரிந்த சில ஆசிரியர்களிடம் இதுபற்றி 
கேட்டபோது, ஆசிரியர் தினத்துக்கு இந்த மாதிரி விழா எடுக்கச்சொன்னாங்க. பசங்க வீட்டிலிருந்து பணத்தை வாங்கி வந்து இந்த
மாதிரி விழா எடுத்தாங்க. இது நடந்தது எல்லாமே தனியார் பள்ளிகளில் தான் என்றார்கள். 

      மாணவ சமுதாயத்துக்காக என்ன செய்துவிட்டது இந்த தனியார் பள்ளிகள்.   எல்.கே.ஜி சேர்க்க க்யூவில் நிற்க வைத்து பணத்தை பிடுங்க தொடங்கி வகுப்பில் சேர்த்த பின் யூனிபார்ம், நோட்-புக், ஸ்பெஷல் க்ளாஸ் என மாதாமாதம் பணத்தை கறப்பதோடு கட்டிட நிதி, அந்த நிதி, இந்த நிதியென ஆண்டுக்கு ஆண்டு பணத்தை கறக்கிறார்கள்.

கூடவே லீவு போட்டால் 
அபராதம், மதிய நேரத்தில் பள்ளியில் உள்ள பிள்ளைக்கு மதிய உணவு ஊட்ட வந்தால் அபராதம் என்று பணத்தை பிடுங்க புது புது வழிகளை உருவாக்குகிறார்கள். 

      பள்ளி நிர்வாகங்களுக்கு சலித்தவர்களில்லை இந்த ஆசிரியர்களும். வகுப்பில் பாடம் நடத்தாமல் வீட்டுக்கு டியூசன் வா என வரவைத்து மாதம் 200ரூபாய்க்கு குறையாமல் பீஸ் பிடுங்குகிறார்கள். பிராக்டிக்கல் மார்க் வேண்டுமா என் வீட்டுக்கு வந்து துணி துவை, வீடு பெருக்கு, காய்கறி வாங்கிவா, எச்சில் பாத்திரங்களை துலக்குவது என தங்களிடம் படிக்கும்
பிள்ளைகளை வேலை வாங்குகிறார்கள். 

      சம்பள உயர்வு, போனஸ், அரியர்ஸ் என செய்யும் வேலையை காட்டிலும் அதிகமாகவே அரசாங்கம் கொட்டி தந்தாலும் பேப்பர் திருத்த பணம் தா, மாலையில் பள்ளியில் சிறப்பு வகுப்பு எடுக்க பணம் தா என அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்து கொடி பிடித்து ஊர்வலம் போகிறார்கள். வேலை நாட்களில் இப்படி பள்ளிக்கு போகாமல் தெருவுக்கு வந்து போராட்டங்கள் செய்கிறோமே மாணவர்களின் படிப்பு என்னவாவது என எந்த ஆசிரியராவது கவலைப்படுகிறார்களா?. 

      அதுமட்டுமா பள்ளியறையை படுக்கையறையாக மாற்றி சல்லாபம் புரிந்து மாட்டிக்கொண்ட ஆசிரியர்கள், மாணவிகளை சீரழித்து மாட்டிய ஆசிரியர்கள் தண்டனை எதுவும் பெறாமல் தொடர்ந்து பணிபுரிகிறார்கள். இவர்கள் மாணவ செல்வங்களுக்கு எதை கற்று தந்திருப்பார்கள். பதவிக்கும், பணத்துக்கும், சுகத்துக்கும் அலைபவர்களாக இருக்கும் இவர்களை போன்றவர் களுக்கு தான் சிறந்த ஆசிரிர்களுக்கான விருதே தரப்படுகிறது. அதைப்பற்றி தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம் அந்தளவுக்கு அத்தனை கோல்மால்கள். 

      இப்படி தப்பு செய்வதையே நோக்கமாக கொண்ட பல ஆசிரியர்கள் தற்போது  தங்களது வகுப்பு மாணவர்களிடம் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு எங்களுக்கு பாதபூஜை செய், மலர் தூவு, காலில் விழு என நிர்பந்தம் செய்வது எந்த விதத்தில் நியாயம்.
அரசியல்வாதிகள் பதவி சுகம் வேண்டியும், இருக்கும் பதவியை தக்க வைத்துக்கொள்ளவும் தான் தனது தலைவன் கால்களில் விழுகிறார்கள். பின் காலை வாருகிறார்கள். அந்த பழக்கத்தை நீங்கள் ஏன் வளரும் மாணவ செல்வங்களுக்கு கற்று தருகிறீர்கள்.
பிள்ளைகளை படிக்க தான் பள்ளிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். உங்கள் கால்களை கழுவி பொட்டு வைத்து, மலர் தூவி, காலில் விழ அனுப்பவில்லை. மரியாதை தரும் அளவுக்கு நீங்கள் சாதனையாளர்களும் அல்ல. மரியாதை என்பது கேட்டுப்பெருவதல்ல. அது ஒருவரின் செயல் பாடுகளை வைத்து மற்றவர்கள் தருவது. கேட்டு வாங்குவது என்பது பிச்சை எடுப்பதற்கு சமம். 

      வருங்கால தலைவர்களை உருவாக்க நீங்கள் என்ன செய்திர்கள்.  யாரோ எழுதி வைத்ததை படித்து விளக்கம் என்ற பெயரில் அவர்களுக்கு சொல்லி தருகிறீர்கள். மாணவர்களும் புத்தகத்தில் உள்ளதை மனப்பாடம் செய்து தேர்வெழுதி பாஸ்செய்கிறார்கள்.

இதுவா கற்று தரும் முறை. நீங்கள் கற்று தந்த லட்சணத்தை சமீபத்தில் தமிழகத்தில் எடுக்கப்பட்ட ஒரு புள்ளி 
விவரம் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வெழுதிவிட்டு வெளிவரும் மாணவ-மாணவிகளில் 70 சதவீத மாணவர்களுக்கு  ஆங்கிலத்தில் பேச தெரியவில்லை. கல்லூரியில் நுழைந்ததும் சிரமப்படுகின்றனர். 

      கணக்கு பாடத்தில்; 40 சதவித மாணவ-மாணவிகள் தோல்வியை தழுவுகிறார்கள். தேர்வில் வெற்றி பெற்றவர்களில் 30 சதவிதமானவர்கள் பார்டர் மதிப்பெண்ணில் வெற்றி பெற்றவர்கள் என குறிப்பிடுகிறது அந்த புள்ளி விபரம். பள்ளி படிப்பை முடித்து வெளியே வரும் 60 சதவிகித மாணவர்களுக்கு உலகத்தை பற்றி, நாட்டை பற்றி, அரசியலைப்பற்றி, ஏன் தாங்கள் படித்த படிப்பு பற்றிக்கூட எதுவும் தெரிவதில்லை. அப்பறம் என்ன நீங்கள் கற்று தந்தீர்கள். 

      கற்று தருவது என்பது புத்தகங்களில் உள்ள எழுத்துக்களை மட்டுமல்ல. உலகத்தை, நாட்டை, மக்களை, அரசியலை, அவர்களை சுற்றி நடப்பவற்றை கற்று தர வேண்டும். அப்போது தான் அந்த மாணவன் சிறந்த மனிதனாக உருவாகுவான்.
அவனுக்கு எதிராக பிரச்சனை நடக்கும் போது போராட முன் வருவான். தவறு செய்வதை தட்டி கேட்பான். அவர்களுக்கு போராட கற்று தர வேண்டும். அதை கற்று தருபவர்கள் தான் சிறந்த ஆசிரியர்கள். 

      தமிழகத்தில் எத்தனை ஆசிரியர்கள் அப்படி இருக்கிறீர்கள் சொல்லுங்கள் பார்ப்போம். கிராமங்களில், நகரங்களில் உள்ள சில பள்ளிகளில் சில ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். மாணவர்கள் நலனுக்காக தங்களது வாழ்வையே அர்பணித்தவர்கள்.
தங்களது ஊதியத்தின் பாதியை மாணவர்களுக்காக செலவு செய்கிறார்கள். இலவசமாக மாலை நேரங்களில் வீட்டுக்கு வரவைத்து பாடம் நடத்துகிறார்கள். ஏழை மாணவர்களுக்கு உதவிகள் செய்கிறார்கள். சமுதாயத்தை பற்றி அவர்களுக்கு கற்று தருகிறார்கள். வாழ்க்கை பாடத்தை புரியவைக்கிறார்கள். 

      மாணவர்கள் முன்னேற்றத்துக்காக, இப்படி ஆசிரியராக செயல்பட்டு காட்டியவர் தான் மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணன். அதனால் தான் சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர்க்கு குடியரசு தலைவர் பதவி தேடி வந்தது. அவரைப்போல மற்ற ஆசிரியர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக தான் அவரின் பிறந்த நாளை ஆசிரியர்கள் தினமாக அறிவித்தார்கள். 

      அந்த நன்நாளில் சாதிக்க தூண்டுபவர்களின் கால்களை கழுவினால் சிறப்பாக இருக்கும். கல்வி என்ற பெயரில் பண கொள்ளை நடத்தி தங்களது வாழ்வை சுகபோகமாக மாற்றிக் கொள்ளும் நிர்வாகிகளின் கால்களையும், அதற்கு ஒத்து ஊதும் ஆசிரியர்களின் கால்களை கழுவினால் அந்த மாணவனுக்கு படிப்பு வராது இவர்களை போன்ற கீழ் தரமான புத்தி தான் வரும். 

      ஆசிரிய பெருமக்களே, இனி வரும் ஆசிரியர்கள் தினத்தில் ஒரு மாணவன் உங்களுக்கு வாழ்த்து சொல்ல வந்தால் அதை ஏற்றுக்கொள்ளும் முன் அந்த தகுதி தனக்குயிருக்கிறதா என ஒவ்வொரு ஆசிரியரும் மனசாட்சியை தொட்டு கேளுங்கள். அதன் பின் முடிவு எடுங்கள்!





***********************************************************
                                                     THANKS TO 
                                                      nakkheeran

****************************************************




mangadu pudukkottai







No comments:

Post a Comment